சம்பந்தன் வேண்டுகோளை ஏற்றே இந்திய சிறப்புத் தூதுரை அனுப்ப முடிவு: ரம்புக்வெல
மீள்குடியேறிய மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் சிறிலங்காவிற்கு வரவிருப்பதாக சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கு ஏற்பவே இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தனது சிறப்புத் தூதுவரை அனுப்ப உள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிபுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் விடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். இதில் எந்தவித ஒளிவுமறைவுமில்லை. இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா. இருநாடுகளுக்குமிடையில் நீண்டகால நல்லுறவு நிலைக்கின்றது.
அண்மையில் இந்திய விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த பின்னர் இலங்கை நிலைமைகளை நேரில் அவதானிக்க விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்பிவைக்குமாறு இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழ்நாட்டிற்கு வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதும் இதனைத் தொடர்ந்து இந்திய அரசின் சார்பில் மீள் குடியேற்றம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.